ஆங்கிலத்தை ஏற்று தமிழைப் புறக்கணித்தாரா?

ஆங்கில மோகங் கொண்டு பேசி, ஆங்கிலம் பரவ துணை நின்றார்; தமிழைப் புறக்கணித்தார் பெரியார் என்பது குணாவின் அடுத்த குற்றச்சாட்டு.
உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமன்றி வேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்தில் பேசுங்கள். பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
நமக்கு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச் சிக்கல் அல்ல; அரசியல் சிக்கல் தான் என்றார்.
இந்தி எதிர்ப்புப் போரை பெரியார் எதிர்த்தார்.
இந்தி எதிர்ப்பின் பயனை மட்டுமே தி.மு.. பயன்படுத்திக் கொண்டது. இந்தி எதிர்ப்பை தி.மு.. பெரிதாகச் செய்யவில்லை என்று பெரியார்மீதும், திராவிட இயக்கங்கள்மீதும் தான் கூறும் குற்றச்சாட்டுகளை குணா விளக்கிக் கூறுகிறார்.
பெரியார் கருத்தை விமர்ச்சிக்கின்ற எவரும் அவர் உள்ளம் அறிந்து, அவர் விருப்பம், நோக்கு, ஆதங்கம் புரிந்து விமர்சித்தால் இந்தக் குற்றச்சாட்டுகள் வராது.
ஆரியப் பார்ப்பனர்கள் ஆங்கிலம் சரளமாகக் கற்று உயர் பதவிகளில், அதிகாரப் பதவிகளில் இருக்கையில் தமிழர்கள் அப்படி இல்லையே! தமிழர்கள் உயரே வரத் தடையாக இருப்பது எது? ஆங்கில அறிவுயின்மைதானே. எனவே, எப்பாடுபட்டவாவது தமிழன் ஆங்கில அறிவு பெற்று பார்ப்பானுக்கு நிகராக உயர வேண்டும் என்ற வேட்கையில், வெறியில் பெரியார் சொன்ன உச்சக்கட்ட உணர்ச்சி வார்த்தைகள் அவை. இங்கு உணர்வுதான் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமேயன்றி, வார்த்தைகள் அல்ல.
தேவாரமும், திருவாசகமும், குமரேச சதகமும், விவேக சிந்தாமணியும் படித்துவிட்டால் தமிழன் எப்படி ஆரியப் பார்ப்பனர்களோடு போட்டியிட முடியும் என்ற நடைமுறைச் சிந்தனையின் விளைவே பெரியாரின் மேற்கண்ட கருத்துக்கள்.
அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஆங்கிலம் அறிந்தவன் தான் மேல்நிலைக்கு வருகிறான். என்னதான் தகுதியும் திறமையும் இருந்தாலும், ஆங்கில அறிவு இல்லையென்றால் அன்றைக்கும் புறக்கணிக்கப்பட்டார்கள்; இன்றைக்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
ஆரியப் பார்ப்பன பெண் ஜெயலலிதா ஆங்கிலப் பள்ளியில் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தாலும், ஆங்கிலம் பேசத் தெரிந்ததால் அவர் அனைத்து இடங்களிலும் நிமிர்ந்து நிற்கிறார்.
ஆனால், தமிழ் உணர்வின் மேலீட்டால், தன் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைத்தார் கலைஞர். அதன் விளைவு மத்திய அமைச்சர் அழகிரி நாடாளுமன்றத்தில் கூனிக் குறுகுகிறார். ஸ்டாலின் டில்லி செல்லும்போது சிரமப்படுகிறார். ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிறது.
இந்த நிலை இருக்கக் கூடாது என்பதற்குப் பெரியார் சொன்ன கருத்துக்களே மேற்கண்டவை. இன்றைக்குத் தமிழ் இளைஞர்கள் உலகம் முழுவதும் சாதனை படைப்பது ஆங்கில அறிவுடன்கூடிய கணினி அறிவும், பொறியியல் அறிவுமேயாகும். அவர்கள் ஆங்கிலம் கற்கவில்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது.
ஆங்கிலம் அறிந்ததால், இன்றைக்குச் சாதனைப் படைத்து, உயர் பதவியில், உயர்நிலையில் தமிழர் வாழ்வது மட்டுமல்ல; ஆரியப் பார்ப்பனர்களை வீழ்த்தி அவர்களைத் தாண்டி மேலெழுந்து வருகின்றனர்.
இன்றைக்குச் சட்டத் துறையானாலும், மருத்துவம், பொறியியல் போன்ற மற்ற துறைகளிலும், திரைத்துறை இசைத்துறை என்று எதை எடுத்தாலும் தமிழர்கள் உலக அளவில் சாதிப்பதற்கு ஆங்கில அறிவு மிகவும் உதவுகிறது.
இதை பெரியாரும் நாமும் மட்டும் சொல்லவில்லை. பாவாணரும் பெருஞ்சித்திரனாரும் சொல்கிறார்கள்.
தனித் தமிழ் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட பெருஞ்சித்திரனார், 1970 ல் தான் எழுதிய கோடரிக் காம்புகள் என்ற கவிதையில் ஆங்கிலம் கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்
தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க!
தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும்
அமிழ்தெனக் கற்க ஆக்கம் பெறுகவே!
என்கிறார்.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் இருமொழிக் கொள்கையை ஏற்றார். உலக அறிவு பெற, அறிவியல் அறிவு பெற, ஆங்கில அறிவு வேண்டும் என்றார். இந்தியா முழுமைக்குமே தாய்மொழியும் ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை ஏற்புடையது என்றார்.
தனித் தமிழ் இயக்கம் நடத்திய தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தன் நூல்களுக்கான முன்னுரையை ஆங்கிலத்திலே எழுதினார். தனது நாட்குறிப்பையும் ஆங்கிலத்தில் எழுதினார். இவர் சமஸ்கிருதத்தை எதிர்த்தாரே தவிர ஆங்கிலத்தை எதிர்க்க வில்லை.
ஆங்கிலத்தின் அவசியம் கருதி இவர்கள் சொன்னதும் செய்ததும் குற்றமா? இவர்கள் தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரிகளா? இவர்களைக் குறை சொல்லாத குணாக்கள் பெரியாரையும் அண்ணாவையும் குற்றம் சாட்டுவது உள்நோக்க உந்துதலால் அல்லவா?
அன்றைய அறிஞர்களை விடுங்கள். இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்ப் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் பாட மொழியாகவும் இருக்க  வேண்டும். ஆங்கில அறிவு கட்டாயத் தேவை என்பதை ஏற்கின்றனர்.
தாய்மொழிக்கு அப்பால் இன்னொரு
மொழியைக் கற்றுக்கொள்வது, அறிவு
வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்
என்கிறது தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி.
இந்தியாவின் ஒரு அங்கமாக, ஒரு மாநிலமாக தமிழ்நாடு உள்ளவரை தொடர்பு மொழியாக ஆங்கிலம் கட்டாயம் தேவை இல்லையென்றால் அந்த இடத்தை இந்திதானே நிரப்ப முயலும்? ஆங்கிலமா? இந்தியா? ஆங்கிலம் என்பதுதானே அறிவுடைமை. ஆங்கிலம் தொடர்பு மொழியானால் இந்தியாவிலும் பயன்படும் இதர நாடுகளிலும் பயன்படும்.
அறிவியல் கருத்துக்களை, உலக மாற்றங்களை, பொருளாதார நடைமுறைகளை உடனுக்குடன் அறிய முடிவெடுக்க ஆங்கில அறிவு கட்டாயம். என்பதே பெரியார் கொள்கை.
தமிழும், தமிழ்ப் புலவர்களும் எப்படி காலத்திற்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெரியார் அளவுக்கு அதிக அக்கறையோடு கூறுகிறார் என்பதைக் கீழே படியுங்கள்.
இந்த நாட்டுத் தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள ஏதாவது சாதனமிருக்கிறதா? பள்ளியில் படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம் என்றால் அங்கு தமிழர்களைப் பற்றி ஒரு சேதியும் இல்லை. எவ்வித பாடப் புத்தகமும் இல்லை. அய்யர்  பிராமணன் போன்ற வார்த்தைகள் காணப்படுகின்றனவே அன்றித் தமிழர் திராவிடர் என்ற வார்த்தைகளுக்கு அங்கு இடம் கிடையவே கிடையாது. மேல் வகுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டு சரித்திரம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், அசோகன், முஸ்லீம், வெள்ளையர் ஆட்சியும்தான் விளக்கப்படுகிறதே தவிர திராவிடர் தமிழர் என்கிற ஆட்சியைப் பற்றி காண்பது மிகவும் அருமை. அப்படி ஏதாவது காணப்பட்டாலும் அது பெரும் பித்தலாட்டமும் மோசடியுமாய் இருக்கும்.
ஆகவே, நமது (தமிழ்) பிள்ளைகள் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள வழியில்லை. ஆரியருக்குமுன் தமிழன் என்ன சமயத்தவன் அவன் கடவுள் எப்படிப்பட்டது. அவன் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்ற சரித்திர ஆதாரம் ஏதும் இல்லை. தமிழர்கள் காட்டுமிராண்டியாக இருந்தார்கள் என்பதற்கே ஏராளமான ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன. நம் பிள்ளைகளுக்கு நம்மைப் பற்றி கீழ் வகுப்பிலிருந்து தெரிந்து கொள்ள வழி செய்தால் ஒழிய, எப்படி அவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!
பாட புத்தகக் கமிட்டியில் உள்ளவர்கள் தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சரித்திரத்தில் சேர்க்கச் சம்மதிப்பார்களா?
பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் இவற்றை நாம் சொல்லும் போது நம்மீது பாய்கிறார்களே தவிர, தமிழர்களுக்கு இழிவு தரக் கூடிய, நமக்குத் தொடர்பில்லாத, நமது முற்போக்கைத் தடுக்கக் கூடிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றை கற்பிப்பது குறித்து கவலைப்படுவதில்லை. இனியாவது தமிழ்ப் பண்டிதர்கள் இதில் கவனம் செலுத்த மாநாடு கூட்டி, இவற்றைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தமிழிலே, தமிழ்மொழி இலக்கியத்திலே, தமிழர் நல்வாழ்விலே, தமிழர் தன்மானத்திலே, தமிழர் தனி ஆட்சியிலே கவலையுள்ள நம் செல்வர்களுக்கு (கல்வி நிலையம் நடத்கின்றவர்களுக்கு) இந்தக் காரியமெல்லாம் முக்கிய கடமையல்லவா என்று கேட்கிறோம்.
நிலைகுலைந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, உணர்ச்சி ஊட்டி அவர்களுக்குத் தன்மான உணர்வும், விடுதலை உணர்வும் ஊட்ட வேண்டாமா? தமிழ் மக்களைத் (அவர்கள் படித்தவர்களானாலும், பண்டிதர்களானாலும், மந்திரி, கவர்னர், வைசிராய், நிர்வாக சபை மெம்பர் ஆனாலும் பகுத்தறிவு விஷயத்தில் மரக்கட்டையாக்கிவிட்டு) தமிழர் அல்லாதவர்கள் அடிமைப்படுத்திச் சுரண்டிக் கொள்ளை கொள்வதைத் தடுக்க வேண்டாமா?
தமிழ் மக்களின் நலத்தில் கவலையுள்ளவர்கள் எது எதற்கு என்றுதான் அழுவது? தமிழர்க்குத் தொண்டாற்றுவது என்றால் என்னதான் அர்த்தம்? ஆகவே, பிள்ளைகளில் மூடக்கருத்துக்களை, தமிழர் விரோதக் கருத்துக்களை நீக்கி, அறிவு வளர்ச்சிக்கு, மான உணர்ச்சிக்கு உகந்த பாடங்களை வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். நமக்குச் சுதந்திரம் உள்ள கல்வி இலாகாவில் இம்மாற்றம் செய்யாமல் வேறு எதில் விடுதலை பெறப் போகிறோம்? - குடிஅரசு (12.02.1944)
நம்முடைய தமிழ்ப்புலவர், பண்டிதர், தமிழறிஞர்களுக்கு இலக்கிய, இலக்கண அறிவு இருக்க முடியுமே தவிர உலகம், சரித்திரம், பூகோளம், பகுத்தறிவு, விஞ்ஞானம் என்னும் துறைகளில் அறிவோ, ஆராய்ச்சியோ இருக்க முடியுமா? இதைச் சொன்னால் நம் புலவர்களுக்குக் கோபம் வருவதில் குறைவில்லை. ஆனால் அப்புலவர்கள் தங்களைப் பற்றிச் சிந்திக்கட்டும். சமூகப் பயனுள்ள காரியம் ஏதாவது அவர்கள் செய்கிறார்களா? செய்யத் தகுந்த சக்தியோ, அறிவோ அவர்களுக்கு இருக்கிறதா? (புராண, இலக்கிய அறிவு தவிர வேறு துறை அறிவு பெற்றுள்ளார்களா?) புலவன், வித்வான் என்றால் அறிவுடையவன் என்பதாகும். நம் புலவர்களுக்குப் பொது அறிவோ, பொதுமக்களுக்கு வழி காட்டும் திறமையோ, முன்னேற்றத்திற்கு வழிகோலவோ, புதுமைகள் செய்யவோ இன்றைய புலவர்களுக்குப் புலமை உள்ளதா? அதற்கு அவர்களுக்குப் பயிற்சி உண்டா?......
புலவர்கள் அல்லது அறிஞர்கள் என்பவர்களுக்கு உலக மாறுபாட்டை அறிந்து, அதற்கேற்ப வாழ்வியலை அமைத்துக் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமையாகும். ஆனால், நம் புலவர்கள், பண்டிதர்கள் மாறுபாட்டை விரும்பாதவர்கள். 3000 வருஷத்திற்கு முன்பிருந்ததை, மூடச் செய்திகளைப் பரப்பவும், நிலைநாட்டவும் முயற்சிப்பவர்கள்.
இப்படிப்பட்ட கல்வியைக் கல்வியாளர்களைக் கொண்ட நாடோ, மக்களோ எவ்வாறு முன்னேற்றமடைய முடியும்? புலவர்களைக் குறை கூறுவதாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாக அவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறோம் என்று கொள்ளவேண்டும்.இளம் புலவர்கள் சிலர் நம் கருத்தை ஏற்றுச் சமுதாய மாற்றத்திற்குப் பாடுபடுவ மகிழ்ச்சியைத் தருகிறது. என்றாலும், இன்னும் துணிவாய் வெளியில் வர வேண்டும்.
(குடிஅரசு, 15.01.1944)
தமிழிலும், தமிழ்ப் புலவர்களிடமும் உள்ள குறைகளைச் சுட்டி, மேம்படுத்த கடுமையாகப் பேசிய பெரியார் தமிழை உயர்த்திப் பேசத் தவறவில்லை.
1.      தமிழ்மொழி செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியை விடவும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியையும் வெல்லக்கூடியது என்று வின்ஸ்ஸோ கூறுகிறார்.
2.      கால்டுவெல், தமிழ்மொழி பண்டையது, நலஞ்சிறந்தது, உயர்நிலையில் உள்ளது, இதைப் போன்ற திராவிட மொழி வேறெதுவும் இல்லை என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
3.      சிலேட்டர் என்பவர், திராவிட மொழி எல்லாவற்றுள்ளும் மக்கள் பேசும் மொழிக்கு உரிய தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ் மொழியே; தக்க அமைப்புடையதும் தமிழ்மொழியே என்கிறார்.
4.      மர்டாக் என்பவர், துராணிய மொழிகள் பலவற்றுள்ளும் மிகச் சீரிய மொழியாயும், அழகிய இலக்கியங்களைப் பொருந்தப் பெற்றதாயும் விளங்குவது தமிழே என்றும் கூறியுள்ளார்.
தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்களுக்குத் தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.
ஜாதிபேதம் தமிழரிடம் இல்லை. எகிப்து, கிரேக்கம், ரோம் முதலிய நாடுகளோடு அன்றைக்கே வணிகத் தொடர்பு கொண்டவர்கள் தமிழர்கள்.
தமிழ்ப் பெண்களும் கல்வியில் புலமை பெற்று விளங்கினர்.
தமிழ் மன்னர்கள் நீதியோடு ஆண்டனர்.
தமிழர்கள் அஞ்சாது வீரப்போர் புரியும் ஆற்றல் உள்ளவர்கள்.
நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய் நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும். - (குடிஅரசு 18.12.1943)
என்று தமிழ் தமிழர் மேன்மையை எடுத்தியம்பும் கட்டுரையைக் குடிஅரசு இதழில் வெளியிட்ட பெரியாரா தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரானவர்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
இவை மட்டுமல்ல, தமிழுணர்ச்சியைத் தமிழைப் பரப்ப வழிகளையெல்லாம் குடிஅரசில் வெளியிட்டார்.
1.      தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.
2.      தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.
3.      வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.
4.      தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.
5.      தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.
6.      கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.
7.      தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும். என்று சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 குடிஅரசு ஏட்டில் பெரியார் வெளியிட்டு தமிழைத் தூக்கி நிறுத்த முயன்றார்.
சென்னை சாந்தோம் சாலையில் அமைந்த முத்தமிழ் நிலையம் அழைப்பை ஏற்றுச் சென்ற பெரியார் ஆற்றிய உரையில், நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்த அமைப்பிற்கு தமிழனிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும் தமிழரும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மை கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவர் ஆவார்கள்.
உங்களுக்கு நண்பர் பாரதிதாசன் அவர்கள் கிடைத்திருப்பது உங்கள் நல்வாய்ப்பிற்கும் உங்கள் வெற்றிக்கும் அறிகுறியாய் இருக்கும். இன்று இந்த நாட்டில் தமிழும், தமிழ்க் கல்வியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்திற்கும், தன்மானத்திற்கும் பயன்படும்படி மக்கள் உணர உழைக்க ஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில் நம் வெற்றித் தன்மையிருக்கிறது.
உங்கள் கழகம் வெற்றியடைய தளராத முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு, ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னாலான உதவியைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டு இளைஞர்களும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப் பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமையாகும் என்று பேசினார் பெரியார்.
- (குடிஅரசு  08.01.1944)
தமிழன் தலை நிமிர்ந்து தன்மானத்தோடும், கல்வியும், அறிவும், உயர்வும் பெற்று வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தட்டியெழுப்பிக் கொண்டேயிருந்தார்.
தமிழா! உன்னுடைய நாட்டில் நீ தாசி மகனா? உனது செல்வத்தாலும், உழைப்பாலும் கட்டப்பட்ட பொது இடங்களில் உனக்கு உரிமை இல்லையா? உனது நாட்டில் உன்னை நம்பி வைத்திருக்கும் உணவுச் சாலையில் நீ தீண்டப்படாதவன் என்று உனக்கொரு தனியிடம் ஒதுக்கி வைப்பதா? என்று அடிக்கடி உணர்வூட்டினார்.
(குடிஅரசு  04.12.1943)
தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர் தழைக்கவும் பெரியார் பாடுபட்டார். திராவிடர் இயக்கம் பாடுபட்டது. கே.பி. சுந்தராம்பாள் என்ற கீழ்ச்சாதிப் பெண் புகழ் பெறுவது விரும்பாத ஆரிய கூட்டமும், ஆரியப் பத்திரிகைகளும், அவரது இசைப் புலமையை இழித்துப் பேசியபோது, அந்த அம்மையாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் பெரியார். இத்தனைக்கும் அந்த அம்மையார் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்.
தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்; தமிழில் இசை இருக்க வேண்டும் என்று கூறுபவர்களை முட்டாள்கள் எனக் கூறுவோருக்குத் தமிழ்நாடு இடங் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களிடையில் தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு எதிராக இருப்பவர்கள், எதிராக வேலை செய்பவர்கள், தமிழில் பாட மறுப்பவர்கள், தமிழர்களின் இக்கோரிக்கையை ஏளனம் செய்பவர்கள் யார்? ஆரியர்கள்தானே. இவர்களைத் தவிர, இத்துணிவுடன் தமிழர்களின் உப்பைத் தின்றுவிட்டு, தமிழ்நாட்டில் வாழ இடம் பெற்று, தமிழர்களின் உழைப்பால் உடலை வளர்த்துக் கொண்டு, தமிழர்களையும் அடிமைப்படுத்தி, தாழ்ந்தவர்களாக்கி, தமிழ் கலைகளுக்கு ஆரிய மேற்பூச்சிட்டு, தமிழோடு வடமொழியைக் கலந்து கெடுத்து, தமிழர்களின் வாழ்வைச் சீர்குலைத்து, தமிழ்நாட்டைத் தங்களுடைய அடிமை நாடாக ஆக்கி வைத்துக் கொள்வதற்கு (பன்னூற்றாண்டு காலமாக) பெரும் துணிவு ஆரியர்களைத் தவிர்த்து வேறு யாருக்கு இருக்க முடியும்?
இந்த ஆரிய வர்க்கத்தார் தமிழரிடையே தங்கள் சதிச் செயல்களை நிறைவேற்றி, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அடிமைப் படுகுழியில் ஆழ்த்திக் கொண்டு வருவதற்கு, இவ்வளவு துணிவாக அவர்கள் செயல்படுவதற்குத் தமிழர்களின் தைரியம் இன்மையே காரணம். ஓரிரு எதிர்ப்புகள் இருப்பினும் அது போதிய அளவு இல்லை. படித்த தமிழர்கள்கூட ஆரியத்திற்கு அடிவருடிகளாகவே இருந்து வருகின்றனர்; தமிழர்க்குத் துரோகமும் செய்கின்றனர். ஒரு சிலர் விலாங்குமீன்போல் இரு பக்கமும் நடிக்கின்றனர்.
தங்கள் தாய்நாட்டிற்கும், தாய்மொழிக்கும் எதிராக உள்ளவர்கள் எவராயினும் அவர்களை வீழ்த்த, விரட்டியடிக்க முன்வர வேண்டும். எவர் பாராட்டுக்கும், புகழ் மொழிக்கும் இச்சை வைக்காமல் உழைத்தால்தான் இதைச் சாதிக்க முடியும்.
1.      தமிழ்ப் பாட்டுக்கள் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் இருக்க வேண்டும். 100க்கு 99 வடமொழி வார்த்தைகள் கலந்ததாக இருக்கக் கூடாது.
2.      புராண மூடநம்பிக்கைகளைக் கொண்ட பாடல்களாக இருக்கக் கூடாது.
3.      நல்ல தமிழில், இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும், அன்பையும், சமத்துவத்தையும், மானத்தையும், நேர்மை, நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும், ஒற்றுமையையும், வரலாற்று அறிவையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.
4.      வாழ்வியல் கேடுகளை அகற்றி, அறிவூட்டக் கூடியதாக இருக்க வேண்டும். இவற்றைச் செய்ய தமிழர்கள் துணிவு கொள்ளாதவரை, தமிழ்நாட்டுச் செல்வர்கள் இதற்குத் தொண்டாற்ற முன்வராத வரையில் நம் முயற்சி வெற்றி பெறாது. தமிழர்கள் இனியேனும் உணர்வு பெற்று, உற்சாகமடைந்து, துணிவு கொண்டு, தங்கள் மொழியையும், நாட்டையும் நயவஞ்சகர்களிடமிருந்து காக்க வேண்டும். தமிழ் இசையின் பெயராலும், பிற வகையிலும், தமிழர்களையும் தமிழ் மொழியையும் குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ் உயர்வு பெறும் வகையில் வழிகாண வேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே! அதற்குத் தருணம் இதுதான்.
(25.12.1943  குடிஅரசு தலையங்கம்)
இப்படியெல்லாம் பெரியார் தமிழுக்கும் தமிழர்க்கும் நாள் தவறாது ஓயாது உழைத்ததால்தான், அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவை இலக்கிய மன்றத்தார் அவருக்கு சிறந்ததொரு பாராட்டு மடல் வரவேற்பிதழாக அளித்தனர்.
தமிழகத்தின் தனிப் பெருந் தலைவர், பெருந்தகை, பெரியார் .வெ. இராமசாமி அவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை, தமிழ் இலக்கிய மன்றத்தார் ஆகியோர் இன்புடன் படித்து அன்புடன் அளித்த, வரவேற்பிதழ்
தமிழ்நாடு தந்த தக்கோய்! வருக! வருக! தங்கள் வரவு நல்வரவாகும்!
வண்டமிழ் நாட்டு வளர்ச்சி எண்ணி உடல் வாட்டமுறினும் உள்ளம் வாட்டமுறாது. உழைத்திடும் உண்மைத் தலைவர் வருக! முன்னோர் மொழி பொருளேயன்றியவர் நிலையும் பொன்னே போற்றுவோம் போற்றுவோம் என்றெண்ணிப் புரிந்து வரும் செயல்களே, கீழ்நாட்டைக் கீழ்நாடாக்கிற்று என்ற உண்மையை உணர்த்திய உணர்வின் வடிவோய் வருக! தமிழரின் மேன்மையைத் தடுத்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று வஞ்சினக் காஞ்சி கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சியைக் குலைப்பதற்குத் தறுகனோடு புகுத்தப்பட்ட இந்தியைத் தடுத்து நிறுத்திய செயற்கறிய செய்த செம்மலே வருக! அவரவர் தம் நாகரிகத்தை அளந்து காட்டவல்லது அவரவர் தம் பொருளறி இசையே எனப் புகன்று தனித் தமிழிசையே தமிழ்நாட்டிற்குத் தக்கதென்று அன்று முதல் புகன்று வரும் தமிழர் தலைவரே வருக! வருக!
அறிவுத்துறை வல்ல அண்ணலே! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து மாணவ மாணவிகளாகிய யாங்கள் அளப்பிலா உவகை கொள்கிறோம். (எங்களுக்கு முன்னும் பின்னும் பயில்வோருக்கு தங்களைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை)................................................................
திராவிட நாட்டுச் சீர்சால் கிழவ! மனிதன் மனிதனாக வாழ வேண்டும், அதற்கு அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வழங்கிய கருவூலமே வருக! ஆணும் பெண்ணும் அமைப்பால் வேறுபட்டோராயினும் வாழ்வில் ஒன்றுபட்ட உயர்வுடையரே எனும் நம் பொன்மொழி தழைக்க! வேற்றுமையை வளர்த்து வீணர்களை வரவேற்பது, விளக்கமற்ற மதவுரைகளே எனும் நம் விரிவுரை செழிக்க! ஆக்கந்தருவன மக்களின் தொண்டேயாகும் என்று, ஆண்டுகளாக ஆண்மையிழந்த தமிழ்நாட்டிற்கு, அடுக்கடுக்காய்ச் செய்து வரும் அரும்பெரும் பணிகள் வாழ்க! சோர்வைப் போக்கும் சுடரொளி வழங்கும் தோன்றால் வாழ்க! பெருநலம் பயக்கப் புதுநெறி வகுத்த இருபதாம் நூற்றாண்டு பெரியோய் இனிது வாழ்க!


சிதம்பரம்,                                                                            அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
07.02.1944                                                                                                   (குடிஅரசு 26.02.1944)

உலகின் உயர் தகுதி பெற்று அன்றைக்கு விளங்கிய, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையே பெரியாரை தமிழர் தலைவராய், தமிழுக்கும், தமிழர்க்கும் தொண்டாற்றி ஏற்றம் பெறச் செய்த ஏந்தல் என்று, ஆனால், அறைக்குள் அடை காக்கும் குணாக்கள் அவதூறு வீசுகின்றனர்!
தமிழர்களே! உண்மை உணருங்கள். எட்டப்பன் குணாக்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துங்கள்!
தமிழ் படித்தால் சமயவாதியாக முடிகிறதே தவிர, அறிவு
வாதியாக முடியவில்லையே! என்பதே பெரியாரின் ஆதங்கம்.
சமுதாயத்தில் தங்கள் தகுதிக்கு சமஸ்கிருதத்தைப் பயன்படுத்திய ஆரியப் பார்ப்பனர்கள், தங்களின் வளர்ச்சிக்கு ஆங்கிலத்தை முறையாக, முழுமையாகப் பயன்படுத்தி மேலே வந்தனர். வாழ்வு, வளர்ச்சி வருவாய் என்று வரும்போது அவர்கள் சாஸ்திரங்களையே மீறினர்.

கடல் தாண்டக் கூடாது பிராமணன் என்ற சாஸ்திரத்தை சாக்கடையில் போட்டுவிட்டு கப்பலேறினர். அயல்நாட்டு படிப்பு, பதவி, பணம் என்று மேலெழுந்தனர். இப்படித் தமிழர்கள் வரவில்லையே என்ற ஆதங்கம்தான் பெரியாருக்கு இருந்ததே ஒழிய மற்றபடி தமிழைக் கேவலப் படுத்தி ஆங்கிலத்தை வளர்க்க வேண்டும் என்பதல்ல!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

ஆரியரும், தமிழ்த் தொண்டும்